ஓலைச் சுவடிகள்

images (2)நானூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட ஓலைச் சுவடிகள் இப்பொழுது கிடைப்பது அரிது. தக்க பாதுகாப்புள்ள சுவடிகளே நீண்ட நாள் நிலைத்திருக்கக்கூடும். எவ்வளவு பாதுகாப்பாக இருப்பினும் முந்நூறு ஆண்டுகளுக்குள் சுவடிகள் பழுதுபட்டுப் போய்விடுவது இயற்கை. பழுதான சுவடிகளை மீண்டும் படியெடுத்து வைத்துப் போற்றுவது முன்னையோர் வழக்கமாயிருந்தது.

நூற்சுவடிகளைப் பொறுத்தவரை 17 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட சுவடிகளைக் காணக்கூடவில்லை. கல்கத்தாத் தேசிய நூலகத்தில் உள்ள சுவடிகளுள், 1611-ல் எழுதப்பெற்ற Ž வகசிந்தாமணியுரைச் சுவடி காணப்படுகிறது. 1682-ல் எழுதப்பெற்ற நன்னூல் உரையும், 1702 ஆம் ஆண்டு எழுதப்பெற்ற திவாகரமும் அங்கு உள்ளன

ஆவணங்களாக உள்ள ஓலைகள் பழமையானதாகக் கிட்டுதல் கூடும். கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையவர்கள், கொல்லம் 448-ல், அதாவது கி.பி. 1273-ல் எழுதப்பெற்ற ஓலை ஆவணம் பற்றிய செய்தியைப் பத்திரிகை வாயிலாக வெளியிட்டுள்ளார். இந்த ஓலையின் தமிழ் நடை கி.பி. 12, 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழ பாண்டியர் கல்வெட்டுகளை ஒத்ததாகும் என்றும் சுட்டியுள்ளார்.

பரம் பரையாகக் கல்வியில் சிறந்து விளங்கிய புலவர் பரம்பரையினர் இல்லங்களில் நூற்சுவடிகள் இருந்து வந்தன. ஏனையரிடமும் சிற்சில சுவடிகள் தங்கின. இசை, நாட்டியம், சிற்பம், சோதிடம், மருத்துவம், பல தொழிற்கலைகள் பற்றிய சுவடிகள் அத்தகு கலைகளைப் போற்றிய குடும்பங்களில் முடங்கிவிட்டன. சமயம் பரப்பும் திருமடங்கள் முன்பு கல்வி நிலையங்களாகவும் விளங்கியமையால் அந்நிறுவனங்களில் பற்பல சுவடிகள் இடம்பெற்றன. சுவடிவழிக் கற்பது 19 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் வெகுவாகக் குறைந்துவிட்டது.

சென்ற நூற்றாண்டில் தமிழ் நூல்களைச் சுவடிகளிலிருந்து எடுத்து அச்சிட முனைந்தோர் பலர். சிறப்பாக ஆறுமுக நாவலர், இராமானுஜக் கவிராயர், திரு வேங்கடாசல முதலியார், கோமளபுரம் இராசகோபாலப் பிள்ளை, சி.வை.தாமோரம் பிள்ளை, டாக்டர் உ.வே.சாமிநாதையர், சிவன் பிள்ளை, கன்னாகம் குமாரசாமிப் பிள்ளை, சுவாமிநாத பண்டிதர் முதலியோர் குறிப்பிடத்தக்கவராவர். இவர்கள் தாங்கள் பதிப்பிக்க முற்பட்ட நூல்களுக்குரிய சுவடிகளையும் தேடிப்பெற்று அச்சிற் பதிக்கலாயினர். இத்தகு அச்சு முயற்சியால் ஆங்காங்கே சிதறிக் கிடந்த சுவடிகள் பதிப்பாசிரியர் இல்லங்களில் திரண்டன.