சித்திர குப்தரும் எமதர்மரும்

சித்திர குப்தரும் எமதர்மரும்
★★★★★★★★★★★★★★★
SG யின் ஜோதிட பார்வை
★★★★★★★★★★★★★

சித்திர குப்தர்
★★★★★★★★
சித்திரை மாதம் பௌர்ணமி திதி சித்திரை நட்சத்திரத்தில் அவதரித்தவர் சித்திர குப்தர்.
சித்திரகுப்தரின் இராசி துலாம்.

காலப்புருஷ ராசியின் ஏழாம் இராசி துலாம்.இந்த ராசியில் கர்மக்காரகன் சனிக்கு உச்ச ராசியாக அமைந்துள்ளது.
துலாம் ராசியின் உருவ அமைப்பு தராசு. ஒரு மனிதனின் கர்மா துல்லியமாக எடைப் போடப்படும் ராசியாக இருப்பதால் தான் இதில் கர்மகாரகன் சனி உச்சம் அடைகிறார்.

சித்திர குப்தரின் பணி ஒரு மனிதனின் கர்மவினை கணக்கை துல்லியமாக எழுதி வைப்பது, அதனால் தான் சித்திர குப்தர் துலாம் ராசியில் அவதரித்துள்ளார்.துலாம் இராசி என்பது தராசு. தராசில் ஒரு தட்டில் பாவமும் மறு தட்டில் புண்ணியமும் எடை போடப்படுகிறது.

நீதிமானாகிய சனியை ஆயுள்காரகன் என்றும் கர்மகாரகன் என்றும் கூறுகிறோம்.துலாமில் நீச்சம் அடையும் கிரகம் சூரியன்.சூரியனை ஆத்மகாரகன் உயிர்காரகன் என்கிறோம்.ஒரு மனிதனின் ஆயுள் முடிந்தவுடன் அம் மனிதனின் உயிர் அதாவது ஆத்மா பிரிந்து சென்றுவிடும்.
எஞ்சி இருப்பது அந்த
மனிதனின் கர்மவினையே அதனால் தான் துலாமில் சனி உச்சமடைகிறார்.

சூரியன் நீச்சம் உயிர் பிரிகிறது.சனி உச்சம் கர்மா வலுப்பெறுகிறது. உயிர் போனாலும் ஒருவரின் கர்மவினை அவரின் பாவ புண்ணியத்திற்கு தக்கவாறு மீண்டும் பிறவி எடுக்கும் என்பதை தெளிவாக உணர்த்தவே ஏழாம் இடம் என்னும் இல்லற பாவத்தில் மீண்டும் தாம்பத்தியம் துவங்குகிறது.ஆக பிறவிக்கு வித்திடும் பாவம் ஏழாம் பாவம்.ஏழாம் பாவகத்தை அஸ்தமனம் என்றும் லக்கினத்தை உதயம் என்றும் ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. எந்த இடத்தில் உயிர் பிரிகிறதோ அதே இடத்தில் உயிரை தோற்றுவிக்க ஆண் பெண் இல்லற சுகத்தை வைத்தது இறைவன் திருவிளையாடல் என்றே கூற வேண்டும்.

முடிவு என்று எங்கு உள்ளதோ அங்கேயே அதன் உதயமும் தோன்ற வித்திடுவது ஏழாம் பாவமே.இப்படிப்பட்ட சிறப்பு மிக்க துலாம் ராசி சித்திரை நட்சத்திரத்தில் அவதரித்த சித்திர குப்தரே மானுட உலகின் பாவபுண்ணிய கணக்கை துல்லியமாக கணக்கிட்டு காட்டும் உயர்நீதி மன்ற நீதிபதியாவர்.

எமதர்மராஜர்
★★★★★★★★
வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர் எமதர்மர். விசாக நட்சத்திரத்தின் 1 2 3 ஆம் பாதங்கள் துலாம் ராசியிலும்,
விசாகம் 4 ஆம் பாதம் விருச்சிக ராசியிலும் உள்ளது.
காலப்புருஷ ராசியின் ஏழாம் பாவம் துலாம்.ஏழாம் பாவத்தை நாம் மாரக பாவம் என்றும், எட்டாம் பாவமான விருச்சிகம் ஆயுள் பாவம் என்று அறிவோம்.பொதுவாக விசாக நட்சத்திரம் உடைந்த நட்சத்திரங்களில் தலையற்ற நட்சத்திரமாகும்.எண்சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம். ஒருவருக்கு தலையின் செயல்பாடுகள் நின்று விட்டால் அவருக்கு ஆயுள் முடிந்துவிட்டது என்கிறோம்.

எமதர்மர் அதனால் தான் தலையற்ற நட்சத்திரத்தில் அவதரித்துள்ளார் என எண்ண தோன்றுகிறது.
ஆயுள் முடிந்தவர்களை தன் பாசக்கயிற்றால் இழுத்து செல்வதற்காகவே விசாக நட்சத்திரத்தில் அவதரித்துள்ளார்.

விருச்சிக ராசி காலப்
புருஷனுக்கு ஆயுள் பாவம். அதில் நீச்சமாகும் கிரகம் சந்திரன். சந்திரனை உடல் காரகன் என்கிறோம்.
உடல் தன் செயல்பாட்டை நிறுத்திவிட்டால் ஆயுள் பிரிந்துவிட்டது என்கிறோம்.
விருச்சிகத்தில் சந்திரன் 3 டிகிரியில் நீச்சமடைவதும், அதுவும் விசாகம் 4ம் பாதத்தில் நீச்சமடைவதும் இந்த நீச்சமான பூத உடலையும் உயிரையும் கைப்பற்ற விசாக நட்சத்திரத்தில் அவதரித்த எமதர்மராஜாவே வருவது தான் இறை தன் கடமையை செவ்வனே செய்கிறது என்பதை அற்புதமாக உணரச் செய்துள்ளது.

உயர்நீதிமன்ற நீதிபதி சித்திரகுப்தர் என்றால் உச்ச நீதிமன்ற நீதிபதி எமதர்மரே.
பூலோக நீதிபதிகளின் தீர்ப்பு மாற்றி எழுதப்பட்டாலும்
மேலோக நீதிபதிகளின் தீர்ப்பில் இருந்து யாவரும் தப்பிக்கவே முடியாது.

சித்திரகுப்தர் உடலற்ற நட்சத்திரமான சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர் .
உடலை பூலோகத்தில் விட்டுவரும் மனிதர்களின் கர்மகணக்கை துல்லியமாக எழுதிவைப்பவர் உடலற்ற நட்சத்திரத்தில் அவதரித்த சித்திரகுப்தரே.

உடலற்ற நட்சத்திரமான
சித்திரையில் பிறந்த சித்திரகுப்தர் உடலின் கர்ம கணக்கையும்,
தலையற்ற நட்சத்திரமான விசாகத்தில் பிறந்த எமதர்மர் ஒரு மனிதனின் உயிர் கணக்கையும் (ஆயுளையும் ) துல்லியமாக நிர்ணயம் செய்யவல்லவர்கள்
என்பதை உணரலாம்.

உடலும் உயிரும் அற்றவர்களால் தான் உடலைப்பற்றியும் உயிரைப்பற்றியும் கணக்கிட முடியும் என்பதற்கு இதுவே சாட்சி. உடைந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முன் ஜென்மவாசனையும்,சூட்சும உலகைப்பற்றிய அறிவும் நிச்சயம் அறிந்திருப்பார்கள்.
ஆவிலோக தொடர்பு கொண்டு பேசுபவர்களும் நிச்சயம் இந்த உடலற்ற நட்சத்திரத்தில் பிறந்தவர்களாக தான் இருப்பார்கள்.

நம் முன்னோர்கள் சித்திரகுப்தரையும் எமதர்மரை பற்றியும்
இந்து மதத்தில் புராண வாயிலாக கூறியுள்ளார்கள் என்றாலும் அவை ஜோதிடத்துடன் ஒப்பிட்டு வருவது ஜோதிடம் வேதத்தின் கண்ணாக செயல்புரிகிறது என்பதை தெள்ளத்தெளிவாக அறியலாம்.

நன்றி

அன்புடன்
அஸ்ட்ரோ சக்திகுரு
நாமக்கல்