நவாம்ச சக்கரம்

ஓம் சரவண பவாய நமஹ:……………. வணக்கம். நவாம்ச சக்கரம் ஜோதிடரகளுக்கு மூன்று வகையில் பயன்படும். 1. ராசி சக்கரத்தில் உள்ள கிரக பலம் அறிவது. 2. ஜாதக பலன் சொல்வது. 3. கிரக பாத சாரம் எழுதப்படாத ஜாதகத்தில், அதை பற்றி அறிவது. இவற்றில் கிரக பலம் அறிய ஸ்தானத்தையும், பலன் அறிய ஸ்தான பலத்தையும் பயன்படுத்த வேண்டும். இந்த இரண்டையும் போட்டு குழப்பி, இதுவே சரியானது என்று பரப்பிவிடும் ஜோதிடர்கள் உள்ளனர். மேலும் சாரம் அறிய நவாம்ச சக்கரத்தின் எண்ணிக்கையை கொண்டு அறிய வேண்டும். இவற்றை பற்றி சற்று விரிவாக பார்ப்போம்.

1. ராசி சக்கரத்தில் ஒரு ராசியில் இருக்கும் கிரகம், அம்சசக்கரத்தில், அதே ராசியில் இடம் பெற்றால் அது வர்கோத்தமம் அடைகிறது என்று பொருள். அதாவது அந்த கிரகம் வலுப்பெறுகிறது என்று பொருள். அதே நேரம் அந்த கிரகம் வர்கோத்தமம் அடையவில்லை என்றால், அம்ச சக்கரத்தில் வேறு எங்கு அந்த கிரகம் இருக்கிறது? என்று பார்த்து, அது நீசமடைந்துவிட்டது, உச்சமடைந்துவிட்டது என்று பலம் காண்பது தவறு. அம்ச சக்கரம் போன்ற மற்ற சக்கரங்களிலும் கிரக பலம் காணவேண்டும். மொத்தம் 16 வகை சக்கரங்கள் உள்ளன. ராசிசக்கரத்தில், ஒரு ராசியில் இருக்கும் கிரகம், எத்தனை சக்கரங்களில், அதே ராசியில் இருக்கிறது என்று பார்த்து பலம் காணவேண்டும் என்கிறது சாஸ்த்திரம். இந்த பலம் காணும் முறையை இதோடு நிறுத்திக்கொள்ளவேண்டும். ஆனால் குழப்பவாதிகள் என்ன செய்கிறார்கள் என்றால், ராசிசக்கரத்தில், ஒரு ராசியில் இருக்கும் கிரகம், அம்சத்தில் வேறு ஒரு ராசியில் இருக்க, சம்பந்தப்பட்ட கிரகம், அம்சத்தில் நீசமாகிவிட்டது என்று தேவையில்லாத ஒரு கணக்கிட்டு, நீசத்திற்குரிய பலன் சொல்வது மிகப்பெரும் வேடிக்கை. அத்துடன், கல்வி, தொழில், திருமணம், சொத்துடைமை, போன்ற எல்லா பலனுக்கும் இந்த அம்ச சக்கரத்தை மட்டுமே பயன்படுத்துகின்றனர். அதுவும் மேற்கண்ட முறையில் உச்ச, நீசம் வேறு கணக்கிடுகிறனர். இது மிகப்பெரும் தவறாகும்.

நவாம்சம் திருமண வாழ்க்கைக்குரிய பலன் மட்டுமே சொல்லும். தசாம்சம் தொழிலுக்குரிய பலன் மட்டுமே சொல்லும். ராசி சக்கரத்தில் களத்திர ஸ்தானத்தை வைத்து பலன் சொல்வதை விட நவாம்சத்தை கொண்டு சொன்னால் திருமன வாழ்க்கை பற்றிய துல்லிய பலன் சொல்லமுடியும். அதுபோல், ராசி சக்கரத்தில் கர்மஸ்தானத்தை வைத்து தொழில், பணி பற்றி பலன் சொல்வதை விட தசாம்சத்தை கொண்டு துல்லியமாக சொல்ல முடியும். இப்படி பலன் காண முனையும் போது இந்த சக்கரங்களில் எந்த கிரகம் எந்த ஸ்தானத்தில் இருக்கிறது. அது உச்சமா? நீசமா? என்று கணக்கிட்டு பலன் காண வேண்டும். ஆனால் அதை விடுத்து தொட்டதெற்கெல்லாம் நவாம்சத்தை மட்டும் வைத்துகொண்டு, அதில் உச்ச, நீசம் பார்த்து பலன் சொல்வது அறிவுடைமையாகாது. சம்பந்தப்பட்ட ஜோதிடர்களிடம், இதை பற்றி விவாதித்தால், நவாம்சம் பார்த்து சொல்வது என் அனுபவத்தில் மிகவும் பொருந்தி வருகிறது, என்று ஒற்றை வரியில் பதில் சொல்லி என் வாயை அடைத்துவிடுகிறனர். ஆக நவாம்சத்தில் உச்ச், நீசம், பகை, நட்பு, ஆட்சி அகியன உண்டு. அதை திருமண வாழ்க்கை பலன் சொல்ல மட்டுமே பயன்படுத்த வேண்டும். கிரக பலம் காண வர்கோத்தம அடிப்படையில் மட்டுமே காண வேண்டும்.

சாரம் காண்பது பற்றி. ராசிசக்கரத்தில் மேஷத்தில் சூரியன் இருக்கிறது. அம்ச சக்கரத்தில் துலாம் எனுமிடத்தில் சூரியன் உள்ளது. இப்போது ராசிப்படி, மேஷத்துக்குரிய நக்ஷத்தரக்கால் ஒன்றில் சூரியன் இருக்க வேண்டும். அம்ச சக்கரத்தில் முதல் கட்டத்திலிருந்து எண்ணி வர சூரியன் 7 ஆவது கட்டத்தில் உள்ளது. மேஷத்தின் 7 ஆவது பாதம் பரணி 3 க்குடையதாகிறது. எனவே ஜாதகத்தில் சூரியன் பரணி 3 ல் இருக்கிறது என்று அறியலாம். இவ்வாறு ஒவ்வொரு கிரகத்துக்கும், பாதசாரம் அறிய நவாம்சம் உதவுகிறது. உதாரண ஜாதகத்தில் சூரியன் மூலம் 1 ல் இருக்கிறது. கணித்து பாருங்கள்.

குழப்பவாதிகளுக்கு சில கேள்விகள். ராசி சக்கரத்தை போல் உச்ச, நீசம் பார்த்து அம்சத்தில் பலன் சொல்லலாம் என்றால், ராசி சக்கரம் எதற்கு? ராசிசக்கரத்திற்கு சமமாக அம்ச சக்கரத்தை உச்ச நீசத்திற்கு பயன்படுத்தி பலன் பார்ப்பதாக இருந்தால், அஸ்தங்கம். வக்கிரம் ஆகியவற்றிற்கும் அம்ச சக்கரப்படி பலன் பார்ப்பீகளா? மேஷத்தில் பரணி 3 ல் சூரியன் இருந்தால், அம்சத்தில் துலாம் எனப்படும் இடத்தில் இருக்கும். என் கேள்வி என்னவென்றால், அம்ச சக்கர துலாம், ராசிப்படி பரணியின் 3 ஆம் பாதம் என்றால் சூரியன் அங்கு உச்சமா? நீசமா? மொத்தத்தில் அம்சதுலாம் சூரியனுக்கு பரணி 3 ஆம் பாதமா? அல்லது நீசஸ்தானமா? நன்றி. வணக்கம்.

https://m.facebook.com/story.php?story_fbid=380048969180668&id=100015267040433