பாரம்பர்ய ஜோதிடம் கூறும் சூட்சுமம்

பாரம்பர்ய ஜோதிடம் கூறும் சூட்சுமம்
★★★★★★★★★★★★★★★★★★

செப்பியதோர் லக்னாதி பலவானாகில் சேர்ந்த சுபருடன் கூடி ஆட்சியுச்சம்
தப்பில்லா கருமாதிபதி பாக்கியாதி
தான் கூடி யிருந்திடவே தாழ்வில்லாமல்
செப்பினோம் முலைமடவாய் தனமும் தானியம் திறமான அறங்கீர்த்தி
உடையோனாவான் அப்படியே பூரணமாய் வயதுமாகும் அறிந்தபடி இன்னங்கேளறிவாய் மானே.

மானே கேள் லக்கினாதிபதி நீசனாகில் மன்னுமுடல் சவுக்கியமே யில்லானாகு
தானாகும் சரராசி கடகம் மேடம்
தான் மகரம் துலாமோடு தவர்ந்துமற்ற
தானாகும் ராசிதனில் இருந்திட்டாலும்
தாயாகமாஞ் சடமில்லை சுகமில்லை
தேனாரும் சுபருடனும் பத்தாமாதி
சேர்நோக்கம் பிரகாச தேகங்காணே.

காணவே சென்மாதிபதிஅங்கிசத்தில் ஏறில் கருது சுகதேகியாந் தனமுடையவனாவான்
நீணவே நினைத்த காரிய முடிப்பன் சபையில் நிர்வாகி யிதமறிந்து நேராய் செல்வான்
பாணவே பூமிகள் விஸ்தாரமாகும்
பார்த்திடவே பிரசித்த கீர்த்திமானாம்
வாணவே நல்ல சுபருடனே கூடில்
வாழ்ந்த மற்றோருடன் கூடி வலஞ்சேர்வானே.

பொருள்:

இலக்கினாதிபதி பலம் பெற்று சுபருடன் கூடி,ஆட்சி உச்சம் பெற்று விளங்கினாலும் அல்லது ஒன்பது பத்தாம் அதிபதியுடன் கூடி நல்ல நிலையில் இருக்கப் பிறந்தவன் தனவானாகவும், தானியங்கள் நிறைந்தவனாய்,வலிமையான அறமும் புகழும் உடையவனாய்,தீர்க்கமான ஆயுள் உடையவனாக விளங்குவான்.

இலக்கினாதிபதி நீசம் பெற்று இருந்தால் உடலில் பலம் இல்லாதவனாகி சௌவுக்கிய குறைபாட்டுடன் இருப்பான். சர ராசியான மேசம் கடகம் துலாம் மகர ராசிதனை தவிர மற்ற ராசிகளில் இருந்தால் உடல் வலுவில்லாதவனாகவும் சுகமில்லாதவனாகவும் இருப்பான்.
ஆனால் இலக்கினாதிபதி சுபக்கிரகங்களுடனும் பத்தாம் அதிபதியுடனும் சேர்ந்தாலும் பார்வை பெற்று இருந்தாலும் ஒளிமயமான நல்ல உடலைப் பெற்றிருப்பான்.

இலக்கினாதிபதி தன் சுய அங்கிசத்திலேயே ஏறியிருந்தால் சுகமுடைய நல்ல தேகத்தை உடையவன். தனமுடையவன். சபைதனில் நினைத்த காரியத்தை செய்து முடிக்க வல்லவன்.
தனக்கு மேல் உள்ள உயர் அதிகாரியின் மனதை அறிந்து, உண்மை தன்மையை நேர்மையாக எடுத்துக்கூறும் மாண்புமிக்கவன். பல பூமிகளை உடையவனாகவும் மற்றவர்கள் பார்த்து பெருமைபடத் தக்க வகையில் புகழுடன் வாழ்வான்.இலக்கினாதிபதி சுபருடன் கூடி இருக்க,புகழ் பெற்று வாழ்ந்த மனிதர்களின் நட்பைப் பெற்று வளமான வாழ்வை அடைவான்.

குறிப்பு:

பாரம்பரிய சோதிடத்தின் தனிச்சிறப்பு என்னவென்றால் ஒன்றை கொண்டு ஒன்பது வகையான பலாபலன்களை
ஒட்டுமெத்தமாக அறிவதால் மற்ற பாவக நிலைகளை கருத்தில் கொள்ளாமலேயே பலன் உரைக்கும் அற்புத ஆற்றலை பெறலாம்.

மேற்கண்ட பாடலின் வாயிலாக நாம் அறிவது இலக்கினாதிபதி சர ராசியில் இருந்தாலே நல்ல தேகத்தையும் புகழையும் நீண்ட ஆயுளையும் பெறலாம் என கூற காரணம் காலப்புருச ராசிக்கு 1-4-7-10 என்னும் கேந்திர பாவங்களில் அமர்வதால் , ஜனன இலக்கினாதிபதி காலப்புருடனுக்கு நல்ல நிலையில் அமரும் தன்மை நற்பலனை தரும் என்ற சூட்சமத்தை அறிந்து கொள்ளலாம்.

இலக்கினாதிபதி ஆட்சி உச்சம் பெற்று பாவருடன் கூடாமல் இருந்தால் நற்பலனை தரும்.

மேற்கண்ட வகையில் உங்கள்
இலக்கினாதிபதி காலப்புருச ராசிக்கு கேந்திரம் பெற்று இருப்பதும் ,இயற்கை சுபகிரகமான குரு சுக்கிரன் வளர்பிறை
சந்திரன் பாவியுடன் சேராத புதன் போன்ற சுபரின் சேர்க்கையை பெற்றிருக்க வேண்டும் என்பதை தெளிவாக அறியலாம்.

இலக்கினாதிபதி கேந்திரங்களில் பெரிதான பத்தாம் அதிபதியுடனும் திரிகோணங்களில் உயர்ந்த திரிகோணமான ஒன்பதாம் அதிபதியின் சேர்க்கை பார்வை பெற்று இருந்தாலே மிக நற்பலன்களை பெறலாம் என்பதை அறியலாம்.இங்கு மட்டும் தான் இலக்கினத்திற்கு ராசயோக கிரகமான தர்மகர்மாதிபதி உடன் சேர்க்கை சிறப்பான பலன் தரும் என்பதை அறியலாம்.

இலக்கினாதிபதி சுய அங்கிசம் ஏறினால் மிகுந்த நற்பலனை பெறலாம் என பாடலின் வாயிலாக தெளிவாக அறியலாம். உதாரணத்திற்கு சிம்ம இலக்கினத்தில் பிறந்து இலக்கினாதிபதி மேசத்தில் இருந்தால் சுய அங்கிசம் பெறுவார்.

மேலும் மேற்கண்ட பாடலின் வாயிலாக
நாம் தீர்க்கமாக அறிவது என்னவென்றால்,
தீர்க்காயுளுக்கு எட்டாம் பாவம் கணக்கில் கொள்ளப்படவில்லை.

தனதான்ய மிக்கவனாக விளங்க இரண்டாம் பாவத்தை எடுத்துக் கொள்ளவே இல்லை.

பல விஸ்தார பூமிகளை பெற நான்காம் பாவம் கூறப்படவில்லை.

இலக்கினாதிபதி ஒன்பதாம் அதிபதி தொடர்பு நல்ல அறவாழ்வு உடையவன் என கூறப்பட்டுள்ளது.

இலக்கினாதிபதி பத்தாம் அதிபதி தொடர்பு புகழுடைய வாழ்வை பெறுவான் என பாடல் கூறுகிறது.

இலக்கினாதிபதி சுயஅங்கிசம் பெற்று இருந்தால் நினைத்த காரியத்தை அடையும் பாவமான 11 மிடம் குறிப்பிடப்படவில்லை.

இலக்கினாதிபதி சரராசியான 1-4-7-10 என்னும் காலப்புருச கேந்திரங்கள் கணக்கில் கொள்ளபடுகிறது.
அதுபோல் இலக்கின கேந்திரமும் கணக்கில் கொள்ளலாம்.

இலக்கினாதிபதி பத்தாம் அதிபதி சேர்க்கை பிரகாசமான தேகமுடையவன் என அறியலாம்.

இலக்கினத்தை கொண்டு தேக ஆரோக்கியமும் உடல் வலிமையையும் தெளிவாக அறியலாம் இங்கு ஆறாம் பாவம் உட்புகுந்துள்ளது.

மேற்கண்ட இலக்கினாதிபதியின் நிலையை வைத்தே 1,8,2,4,6,7,9,10,11 ஆம் ஒன்பது பாவகங்களின் நிலைகள் அனைத்தையும் அறிய வைப்பது தான் பாரப்பர்ய ஜோதிடம் உணர்த்தும் அதி சூட்சுமம் என்றால் அது மிகையாகாது.

இலக்கினாதிபதியின் நிலையை தீர்க்கமாய் அறிந்தால் உங்களின் விதிபயனை திறம்பட அறியலாம்.

பதியை அறிந்து விதியை அறியுங்கள்.

நன்றி

அன்புடன்

அஸ்ட்ரோ சக்திகுரு
நாமக்கல்.