அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில்

ufiy

அன்னையெனும் சமயபுர அன்புருவே வா வா வா !
ஆனந்த மணிவிளக்கே அழகொளியே வா வா வா !!
இன்னவிருள் அகற்றிடுவோர் இன்னமுதே வா வா வா !!!.
ஈகை மனங்கொண்டோரின் இசை மலரே வா வா வா !!!!.
என்றெழைத்தவுடன் அங்கு இங்கு எனாதபடி எங்கும் நிறைந்து பேரறிவான பேரொளியாய் ஒர் நாமம், ஒர் உருவம் ஒன்று இன்றி நிற்கும் பராசக்தி சிருஷ்டி முதலிய கிருத்தியங்களில் ஆற்றலும் அவ்வாற்றலையுடைய வளுமாக சேர்ந்து சரஸ்வதி, வைஷ்ணவி, ரௌத்ரீ, மாஹேஸ்வரி மனோன்மணி என்ற பெயர் பூண்டு ஞானசக்தி, கிரியா சக்தி, இச்சா சக்தி வடிவம் கொண்டு உயிர்களை உய்விக்க வேண்டும் எனும் பெருங்கருணையிலே தியான பூஜா நிமித்தமாய் அளவற்ற உருவமும் பெயரும் கொண்டு விறகில் தீ போலவும், பாலில் வெண்ணெய் போலவும், நின்று அருளும் இடமாகிய சமயபுரம் எனும் கண்ணனூரிலே, கிருஷ்ணாவதாரத்தில் தேவகியின் குழந்தையாக கிருஷ்ணனும், யாசோதையின் குழந்தையாக மாயா தேவியும் அவதரித்தனர். பிறகு அவ்விரு குழந்தைகளும் இறைவன் விருப்பத்தினால் இடம் மாறின. தேவகியின் பிள்ளையால் தனக்கு அழிவு உண்டாகும் என்பதை அறிந்த கம்சன், பிள்ளைகள் இடம் மாறியதை அறியாமல் சிறையில் தேவகியிடமிருந்த பெண் குழந்தையைக் கொல்ல மேலே தூக்கினான். அக்குழந்தை அவன் கைகளிலிருந்து மேலே எழும்பி – வில், அம்பு, சூலம், பாசம், சங்கு, சக்கரம், வாள் முதலிய ஆயுதங்களை தரித்துத்தோன்றினாள். அத்தேவியே ’மகா மாரியம்மன்” என்ற கண்கண்ட தெய்வமாக அழைக்கப்பட்டாள். மக்களின் தீவினைகளையும், தீராத நோய்களையும், தன்னுடைய வேப்பிலை மகிமையால் தீர்த்து வைக்கும் ஆயிரங்கண்ணுடையவளாய் அருள்பாலிக்கிறாள். மாரியம்மன் உற்சவத் திருமேனி ஆதியில் விஜயநகர மன்னர்களால் வழிபாடு செய்யப்பெற்று வந்ததென்றும், அந்த ஆட்சிக்கு தளர்ச்சி நேர்ந்த போது பல்லக்கைத்தூக்கி வந்தவர்கள் அம்மன் திருமேனியை சமயபுரத்தில் கீழே இறக்கி வைத்து உணவு உட்கொள்ள சென்றார்கள் எனவும், பின்னர் வந்து பல்லக்கை தூக்க முயலும் போது, தூக்க இயலவில்லை எனவும், பிறகு விஜயரங்க சொக்கநாதர் கண்ணனூரில் தனிக்கோயில் அமைத்து அம்மனை பிரதிஷ்டை செய்தார் எனவும் செவிவழிச் செய்தி கூறுகிறது. இதனாலேயே சாய்ந்தாள் சமயபுரம், சாதித்தாள் கண்ணபுரம் என்ற முதுமொழியும் இருந்துவருகிறது.

 தலச் சிறப்பு
      இத்திருக்கோயிலில் மூலவர் அம்மன் சுதையினால் ஆன சுயம்பு வடிவமாக 27 நட்சத்திரங்களையும் ஆதிக்கங்களையும் தன்னுள் அடக்கி 27 இயந்திரங்களாக திருமேனி பிரதிஷ்டையில் மகா மாரியம்மன் அருள்பாலிப்பது தனிச்சிறப்பாகும். அம்பாளின் திருமேனியில் நவக்கிரக ஆதிக்கத்தை உள்ளடக்கி நவக்கிரகங்களை நவசர்ப்பங்களாக திருமேனியில் தரித்து அருள்பாலிப்பதால் அம்பாளை தரிசனம் செய்வதன் மூலம் நவக்கிரக தோசம் நீங்கும் என்பது ஐதீகம். மேலும் அம்பாளை அமாவாசை பௌர்ணமி காலங்களில் வழிப்பட்டால் உச்ச பலன் கிடைக்கும் என்பது தனிச்சிறப்பாகும்.